Try GOLD - Free

தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - All Issues

உலகமயப் பொருளியல் ஆக்கிரமிப்பும், சுரண்டலும் தீவிரப்பட்டுள்ள இன்றைய உலகில், பல்வேறு தேசிய இன மக்களும் தமது அடையாளங்களையும், தாயகங்களையும் மீட்கவும், இருக்கின்ற தாயகத்தை தக்க வைத்துக் கொள்ளவும் போராடுகின்றனர். இவ்வகையில், தமது வரலாற்று இருப்பை பதிவு செய்யப் போராடும் இனமாக உலகின் மூத்த இனமாகிய தமிழ் இனம் இன்றைக்கு விளங்குகிறது. தமிழக மக்கள், தமிழீழ மக்கள், புலம் பெயர்ந்த தமிழீழ – தமிழக மக்கள் என உலகெங்கும் தமிழ் மக்களும், பிற தேசிய இன ���க்களும் நடத்தி வருகின்ற போராட்டங்களையும், மக்களின் பண்பாட்டு நிகழ்வுகளையும் பதிவு செய்யவும், பரப்புரை செய்யவும், மீள் கட்டமைக்கவும் மாற்று ஊடகங்கள் அவசியம். எதேச்சதிகாரக் கொடுங்கோன்மைகளை எதிர்த்து 2010 செப்டம்பரில் தொடங்கிய அராபிய எழுச்சிக்கு மாற்று ஊடகங்களே முக்கியக் காரணமாக விளங்கின. இவ்வகையிலான மக்கள் திரள் எழுச்சியைக் கட்டமைக்கும் நோக்குடன், அராபிய எழுச்சி சிரியாவை பற்றிக் கொண்ட மார்ச் 15 அன்று முதல் ‘கண்ணோட்டம்’ இணைய இதழ் செயல்தளத்திற்கு வருகின்றது. ஆளும் அரசுகளின் அரசியல், பொருளியல், பண்பாட்டுத் திணிப்புகளை எதிர்த்து எழுகின்ற மக்கள் போராட்டங்களின் மீது நம்பிக்கை கொண்டு செயல்படும் மாற்று அரசியல் சிந்தனையாளர்களால் தமிழகத்திலிருந்து நடத்தப்படும் இவ் இணைய இதழ் தமிழ் இனம், மொழி நலன் காக்கும் செய்திகள், கட்டுரைகள் உள்ளிட்ட படைப்புகளை வெளியிடவும், இது சார்ந்த விவாதங்களை ஊக்குவிக்கவும் தொடர்ந்து நடத்தப்படும். தங்களது ஆக்கங்களையும், கருத்துகளையும் எமது கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மின்னஞ்சல்: tkannotam@gmail.com