Choose Your Language

Enjoy unlimited access to 5,000+ best-selling magazines and thousands of recommended articles with Magzter GOLD!

Cinema Express

எம்.எஸ்.வி பெயரில் விருது! - கவிஞர் பிறைசூடன்


News - - Cinema Express

திரைப்பட இசையமைப்பாளர்களுக்கும் பாடலாசிரியர்களுக்கும் ராயல்டி பெற்றுத் தருவதற்காக அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின்கீழ் இயங்கும் "இந்தியன் பர்பாமிங் ரைட் சொசைட்டி' என்ற அமைப்பின் இயக்குநர்களில் ஒருவரும் திரைப்படப் பாடலாசிரியருமான பிறைசூடன் எம்.எஸ்.விஸ்வநாதன் பற்றி நினைவு கூர்கிறார்... "திரைப்படத் துறையில் என்னை பாடலாசிரியராக அறிமுகப்படுத்தியதே மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்தான். ஆர்.சி.சக்தி இயக்கத்தில் ராஜேஷ்-லட்சுமி நடித்து வெளிவந்த "சிறை' படத்தில்தான் முதன்முதலாக நான் பாட்டு எழுதினேன். இந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்கக் காரணமாக இருந்தவர் "மக்கள் குரல்' பத்திரிகையில் பணியாற்றும் ராம்ஜி என்ற பத்திரிகையாளர்தான். "சிறை' படத்துக்காக நான் எழுதிய "ராசாத்தி ரோஜாப்பூ வெட்கம் ஏனோ' என்று தொடங்கும் பாடல் ஜெமினி ஸ்டுடியோவில் ஒலிப்பதிவானது. சற்று இடைவெளிக்குப் பின், வி.சி.குகநாதனின் "இது எம்.ஜி.ஆர்.இல்லம்' என்ற படத்துக்காக எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் சில பாடல்கள் எழுதினேன். இந்த இசை ஆல்பம் வெளிவந்தது. ஆனால் படம் வெளிவரவில்லை. இதே போல் அவரது இசையமைப்பில் நான் எழுதிய மற்றொரு படத்திற்கான பாடல்களும் பதிவு செய்யப்பட்டதே தவிர படம் வெளிவரவில்லை. ஆயினும் அவருடன் எப்போதும் நல்ல உறவில் நான் இருந்தேன். எனவேதான் அவரது இசையில் நிறைய பக்திப் பாடல்கள், பெண்களுக்கான இசைப் பாடல்கள், தனி ஆல்பங்கள் ஆகியவற்றுக்குப் பாடல்கள் எழுதினேன். லேகா சொனடோன் என்ற நிறுவனம் உலகில் உள்ள அனைத்து நாட்டு இசைகளையும் தொகுத்து எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தக்கூடிய வகையில் ஒரு புதுமையான இசை நூலகத்தை உருவாக்கியது. லேகா சொனடோன் நிறுவனத்திடம் எம்.எஸ்.விஸ்வநாதனை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினேன். இந்த நிறுவனத்துக்காக நான் எழுதிய ஏராளமான பாடல்களுக்கு அவர் இசையமைத்தார். காதல், சோகம், நகைச்சுவை என்று விதவிதமான பாடல்கள் லேகா சொனடோன் இசைத் தொகுப்பில் இருக்கின்றன. 1992ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி எஸ்தர் ஃபைன் ஆர்ட்ஸ் என்ற நிறுவனம் எனக்கு "கவிஞானி' என்ற பட்டத்தை வழங்கியது. இந்தப் பட்டத்தை எனக்கு அளித்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். அவருடைய வயதுக்கும் அனுபவத்துக்கும் என்னைப் பெயர் சொல்லியே அழைக்கலாம். ஆனால் ஒரு நாளும் அப்படி என்னை அவர் பெயர் சொல்லி கூப்பிட்டதில்லை. "பாட்டு வாத்தியாரே...' என்றுதான் என்னை அழைப்பார். பாடலுக்கு இசையமைக்க அமர்ந்தால் சாதாரணமாக இருபது இருபத்தைந்து "ட்யூன்'கள் போட்டுக் கொண்டே போவார். நமக்குத்தான் எதைத் தேர்ந்தெடுப்பது என்று தெரியாமல் தடுமாற்றமாக இருக்கும். ஒரு பாடலை பத்து பதினைந்து விதமாக பாடிக்காட்டுவார். அனைத்தும் ஒன்றையொன்று மிஞ்சும் விதத்தில் அற்புதமாக இருக்கும். "எப்படி இவ்வளவு பிரமாதமாக "ட்யூன்' போட்டீர்கள் என்று கேட்டால், "நான் என்ன செய்தேன்? உங்கள் வார்த்தையில் இருந்த சங்கீதத்தை வெளியே கொண்டு வந்தேன்' என்று சாதாரணமாகச் சொல்லுவார். பல இசையமைப்பாளர்கள் கம்போஸிங் சமயத்தில் "எனக்குத் தலை வலிக்கிறது', "உடல் நிலை சரியில்லை', "மூடு வரவில்லை' என்றெல்லாம் சொல்லுவார்கள். ஆனால் எம்.எஸ்.வி. அப்படியெல்லாம் சொல்லவே மாட்டார். பொதுவாக ஒரு வேலையை தொடர்ந்து செய்யும்போது களைப்பு வருவது என்பது எல்லோருக்கும் சகஜமான ஒன்றுதான். ஆனால் உற்சாகத்துடன் கம்போஸ் செய்ய உட்காரும் எம்.எஸ்.வி. நேரம் செல்லச் செல்ல களைப்படையவே மாட்டார். மாறாக இன்னும் உற்சாகமாக செயல்படுவார். யாரையும் குறை சொல்ல மாட்டார். அவர் வேண்டாம் இவர் வேண்டாம் என்று எவரையுமே ஒதுக்க மாட்டார். தலைக்கனம் இல்லாத தமிழ்க் கனத்தை நான் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் மட்டுமே பார்த்தேன். இளையராஜா இசையமைப்பிலும் நான் நிறைய பாடல்களை எழுதியிருக்கிறேன். பாடல் பிரபலமடைவது தன்னுடைய இசையமைப்பால்தான் என்ற நினைப்பு இளையராஜாவிடம் உண்டு. ஆனால் எம்.எஸ்.வி. ஒரு போதும் அப்படி நினைக்க மாட்டார். பிறப்பால் அவர் தமிழர் அல்ல. மலையாளிதான். அவரது இசையில் பாடிய எஸ்.பி.பாலசுப்ரமணியம், பி.சுசீலா, கே.ஜே.யேசுதாஸ் என்று பலரும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராதவர்கள்தான். ஆனால் இவர்கள் உருவாக்கிய தமிழ்ப் பாடல்களில் யாராவது குறை ஏதும் சொல்ல முடியுமா? தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிராத இவர்கள் எல்லோரும் எவ்வளவு அற்புதமான பாடல்களை உருவாக்கியிருக்கிறார்கள்? பாடல் வரிகளை மிஞ்சி இசை ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்று நினைக்கும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன். வார்த்தைகளும் சரியாக உச்சரிக்கப்பட வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். அவரது இசையில் நான் எழுதிய ஒரு பாடலில் "சன்னதி' என்ற வார்த்தையை "சன்நிதி' என்று எல்.ஆர்.ஈஸ்வரி உச்சரித்ததை சுட்டிக்காட்டியதால் அவர் கோபித்துக் கொண்டு போய்விட்டார். பின்னர் அவரை சமாதானப்படுத்தி அவரது உச்சரிப்புத் தவறை உணர்த்திய பிறகு மீண்டும் வந்து பாடிக் கொடுத்து விட்டுப் போனார். என்னுடைய மகள் திருமணப் பத்திரிகையை கொடுக்க அவர் வீட்டுக்குச் சென்றேன். போவதற்கு முன்பு போன் செய்துவிட்டுத்தான் போனேன். ஆனால் நான் அவர் வீட்டு வாசலில் போய் இறங்கும்போது, அவர் லிஃப்டிலிருந்து கீழ்தளத்துக்கு வந்து என்னை வரவேற்று அழைத்துச் சென்றார். அவர் இசையறிவுக்கும் ஆற்றலுக்கும் முன்னால் நான் ஒரு பொடிப் பையன். ஆனால் என்னை வரவேற்க வேண்டும் என்பதற்காக கீழே வந்திருக்கிறார். அந்த அளவுக்கு பண்பான மனிதர் அவர். ஆனால் அப்படிப்பட்ட மாமனிதரின் மகன், அப்பாவுக்கு மார்க்கெட் இல்லை என்பதால் அப்போது மார்க்கெட் உச்சத்தில் இருந்த இளையராஜாவை வைத்து "செந்தமிழ்ச் செல்வன்' என்ற படத்தை எடுக்கிறார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் நான் எழுதிய பக்திப் பாடல் ஒன்றின் பதிவு அரவிந்த் ஒலிப்பதிவுக் கூடத்தில் நடக்கும்போது அவர் மகன் முரளி வந்து, "இளையராஜா கம்போஸிங்கிற்கு வரச் சொல்கிறார். உடனே வாருங்கள்' என்று அழைக்கிறார். "இங்கு பாடல் பதிவு இருக்கிறதே' என்று சொல்லும்போது, "இது தனி ஆல்பம்தானே... கேன்சல் செய்து கொள்ளலாம்' என்று சொல்கிறார். "தனி ஆல்பம் என்றாலும் இதுவும் பாடல் பதிவுதானே... மதியம் உணவு இடைவேளையிலோ அல்லது இந்தப் பாடல் பதிவு முடிந்த பிறகு மாலையிலோ இளையராஜா கம்போஸிங்குக்குப் போகலாம்' என்று எம்.எஸ்.விஸ்வநாதன் சொல்லிவிட்டு அந்தப் பாடல் பதிவை செய்தார். அவர் இறந்த பிறகு இப்போது எல்லோரும் அவருக்கு "பத்மஸ்ரீ' விருது கிடைக்கவில்லை. "பத்ம பூஷண்' விருது வழங்கப்படவில்லை என்றெல்லாம் சொல்கிறார்கள். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே தொலைக் காட்சி பேட்டியொன்றில் எம்.எஸ்.விஸ்வநாதன் என்ற இசை மேதைக்கு ஏன் இந்த அரசாங்கம் உரிய அங்கீகாரத்தை வழங்கவில்லை என்று நான் கேள்வி எழுப்பினேன். இசைத் துறையில்கூட எத்தனையோ பேருக்கு எவ்வளவோ அரசாங்க விருதுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றனவே? அவர்களையெல்லாம் யாரோ முன் மொழிந்தும் யாரோ வழி மொழிந்தும்தானே விருது வழங்கியிருக்கிறார்கள். எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அவ்வாறு யாரும் தொடர்ந்து முன் மொழிந்தும், வழி மொழிந்தும், வற்புறுத்தியும் விருதுக்குப் பரிந்துரைக்காதது ஏன்? அவர் பி.எச்.டி. பட்டமே பெற்றுவிட்டார். இனி அவருக்கு எல்.கே.ஜி. பட்டம் எல்லாம் தேவையில்லை. எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு விருதோ பட்டமோ வழங்காவிட்டால் பரவாயில்லை. அவர் பெயரால் நாமே ஒரு விருதை ஏற்படுத்தலாம். இன்று உலகெங்கும் வாழும் தமிழர்கள் கண்டிப்பாக அவரது பாட்டை கேட்டு ரசித்தவர்களாகத்தான் இருப்பார்கள். ஒவ்வொரு தமிழனும் ஆளுக்குப் பத்து ரூபாய் கொடுத்தாலே மிகப் பெரிய தொகை சேரும். அதை வங்கியில் போட்டு அதில் கிடைக்கும் வட்டியில் ஆண்டுதோறும் இசைத்துறையில் சாதனை புரிந்த ஒருவருக்கு நாம் எம்.எஸ்.விஸ்வநாதன் பெயரில் விருது வழங்குவோம். ஆல்ப்ஃரெட் நோபல் என்பவர், தான் சம்பாதித்த சொத்தையெல்லாம் அறக்கட்டளையாக்கி, உலகெங்கும் சாதனை புரிந்தவர்களைத் தேர்ந்தெடுத்து வழங்குவதுதானே நோபல் பரிசு. எம்.எஸ்.விஸ்வநாதன் பெயரில் நாமே இப்படி ஒரு பரிசை ஆண்டுதோறும் வழங்கினால் என்ன?